ஈரோடு மாநகராட்சியில் ரூ.517.18 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: ரூ.5 கோடியே 49 ஆயிரம் உபரி நிதி

ஈரோடு மாநகராட்சியில் ரூ.5 கோடியே 49 ஆயிரம் உபரி நிதியுடன் மொத்தம் ரூ.517 கோடியே 18 லட்சத்துக்கு பட்ஜெட்டை மேயர் நாகரத்தினம் தாக்கல் செய்தார்.
ஈரோடு மாநகராட்சியில் 2025-2026-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் சிறப்பு கூட் டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதன்படி, ஈரோடு மாநகராட்சியின் வருவாய், மூலதனநிதி, குடிநீர், வடிகால்நிதி, தொடக்க கல்வி நிதி என மொத்த வருவாய் ரூ.517 கோடியே 18 லட்சத்து 60 ஆயிரமாகும்.
இதில் மொத்த மூலதன செலவு மற்றும் சாதாரண செலவு என மொத்தம் ரூ.512 கோடியே 18 லட்சத்து 11 ஆயிரமாகும். எனவே 2025-2026-ம் ஆண்டுக்கான ரூ.5 கோடியே 49 ஆயிரம் உபரி பட்ஜெட்டை மேயர் நாகரத்தினம் தாக்கல் செய்தார்.
அதன்படி, சொத்து வரி மூலமாக ரூ.71.92 கோடி வருவாய் கிடைக்கும். இதில் வருவாய் நிதிக்கு ரூ.31.26 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதிக்கு ரூ.28.15 கோடி, ஆரம்ப கல்வி நிதிக்கு ரூ.12.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மூலமாகவும் தொழில் வரியாக ரூ.6.78 கோடி வருவாய் கிடைக்கும்.
மாநகராட்சிக்கு பதிவுத் துறை மூலமாக சொத்து மாற்றங்களுக்குரிய வரியாக ரூ.7 கோடியும், கேளிக்கை வரியாக ரூ.1.50 கோடியும் என மொத்தம் ரூ.8.50 கோடி வருவாய் கிடைக்கும்.
மாநகராட்சி வணிக வளாகம், சந்தை, பேருந்து நிலையம், வாகன நிறுத்தம், சிறு குத்தகை இனங்கள் மூலமாக ரூ.12.86 கோடி, ஒப்பந்ததாரர் உரிமக் கட்டணம், பதிவுக் கட்டணம், தொழில் உரிமக் கட்டணம், குடிநீர், புதை சாக்கடை கட்டணம் மூலமாக ரூ.58.29 கோடி, மாநகராட்சி திட்டப் பணிகளுக்கான மானியங்கள் மற்றும் கடன்கள் மூலமாக ரூ.260.48 கோடி கிடைக்கும்.
மாநகராட்சிப் பணியாளர்களுக்கு ஊதிய செலவு ரூ.98.05 கோடி, ஓய்வூதியப் பயன்களுக்காக ரூ.28.74 கோடி, நிர்வாக செலவுக்காக ரூ.34 லட்சம், குடிநீர் விநியோகம், கல்வி நிதி மூலமாக பராமரிப்புப் பணி போன்றவற்றுக்கு ரூ.89.96 கோடி செலவாகும்.
திட்டப் பணிகளுக்காக வாங்கிய கடனுக்கு அசல் மற்றும் வட்டி என ரூ.10.71 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய், குடிநீர், கல்வி நிதிகளில் மூலதன வேலைப் பணிகளுக்காக ரூ.269.51 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu