பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு

பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு
X

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் செட்டிநொடி என்ற இடத்தில், மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலைப்பாதை கீழே சரிந்தது.

அந்தியூர் அருகே மண்சரிந்த மலைப்பாதை சரிசெய்யப்படாததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் பரிதவித்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் செட்டிநொடி என்ற இடத்தில், மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலைப்பாதை கீழே சரிந்தது. அதனால் ஈரோட்டிலிருந்து அந்தியூர் வழியாக கர்நாடக மாநிலம் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. பர்கூர் அருகே உள்ள தேவர்மலை பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தாமரைகரை, கடையரெட்டி, ஈரெட்டி மலை கிராம மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் நாள்தோறும் சென்று வந்தார்கள்.

செட்டிநொடியில் சரிந்த மண்பாதை செப்பனிடப்படாததால் தேவர்மலை பள்ளிக்கு மாணவ-மாணவிகளால் செல்ல முடியவில்லை. இதேபோல் தாமரைகரையில் இருந்து பர்கூர் உண்டு, உறைவிட மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் வீட்டிலேயே உள்ளார்கள். இருசக்கர வாகன வசதி உள்ள பெற்றோர் மட்டும் மாணவ-மாணவிகளை கொண்டு சென்று விடுகிறார்கள். இதுமட்டுமின்றி பஸ்சில் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செட்டிநொடியில் சரிந்து கிடக்கும் மலைப்பாதையை உடனே சீரமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!