ஈரோட்டில் இடி, மின்னலுடன் பலத்த மழை: நிரம்பி வழியும் ஏரி, குளங்கள்
ஈரோட்டில் நேற்று மதியம் திடீரென வெயில் அடிக்க தொடங்கியது. நேற்று மாலை மீண்டும் மேகமூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து சாரல் மழை தூறியது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாக்கடைகள் நிரம்பி, மழை தண்ணீர் வீடுகள் முன்பு தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
அதன் பிறகு, மழை வெள்ளம் வடிந்தது. நம்பியூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, மொட்டணம் கிராமம் மஜ்ரா பழையூர் பகுதியில், பாட்டப்பா கவுண்டர் என்பவரது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல், அவர் தத்தளித்து கொண்டு இருந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும், அவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்து சேதமானது.
மழை காரணமாக சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டுச்சுவரும் இடிந்து விழுந்தது. தொடர் மழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 48 ஏக்கர் குளம் 30 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி வழிகிறது. தண்ணீர் சாலையில் 5 அடிக்கும் மேல் ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தண்ணீர் வடிந்ததும் போக்குவரத்து தொடங்கியது.
இதே போல் அந்தியூர் அருகே உள்ள 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியும் நிரம்பி வழிகிறது. உபரி நீர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை, நெல், கரும்பு, சோளப்பயிர்கள் அழுகி வருகிறது. ஆப்பக்கூடல் அருகே உள்ள சஞ்சீவிராயன் ஏரியும் நிரம்பி வழிகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. ஈரோடு நகரில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நடை பாலத்தை தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu