பொங்கலுக்கு வெல்லம் தயார்: உற்பத்தியாளர்களுக்கு இனிக்குமா?

பொங்கலுக்கு வெல்லம் தயார்: உற்பத்தியாளர்களுக்கு இனிக்குமா?
X
கட்டுப்படியாகும் விலைக்கு விற்றால் மட்டுமே எங்களுக்கு பொங்கல் இனிப்பாக இருக்கும், என உற்பத்தியாளர்கள்தெரிவித்துள்ளனர்

பொங்கல் என்றாலே மக்களுக்கு ஞாபகம் வருவது இனிப்பு தான், கரும்பு மற்றும் வெல்லம் இல்லாத பொங்கலே இல்லை எனலாம், அந்த அளவிற்கு அதன் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.

அம்மாபேட்டை பகுதியில் ஊமாரெட்டியூர், காடப்பநல்லூர், சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம், மாணிக்கம்பாளையம், சித்தார், சொட்டையனூர், குட்ட முனியப்பன் கோயில் ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அம்மாபேட்டையில் தோட்டப் பகுதியில் இருந்து கரும்புகள் வாங்கி வந்து அதனை அறுவை செய்து குண்டு வெல்லம், நாட்டுசர்க்கரை மற்றும் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கரும்பைப் பிழிந்து அதனை வேக வைத்து அச்சுக்களில் ஊற்றி அச்சு வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் குண்டு வெல்லம் மற்றும் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வெல்லத்தின் விலை தான் உற்பத்தியாளர்களை கவலை கொள்ள செய்துள்ளது

இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு அச்சு வெல்லம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.350 க்கு விற்பனை ஆனது, இந்த ஆண்டு ரூ.250க்கு விற்பனை ஆவதால் எங்களால் உற்பத்தி செலவை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த ஆண்டு பொருட்களின் மூலதன செலவு, ஆட்கள் கூலி போன்றவை அதிகரித்து விட்டது. ஆனால் தயாரிப்பு விலையை விட விற்பனை விலை குறைவாகவே உள்ளது.

இன்னும் பொங்கலுக்கு 6 நாட்களே உள்ளதால் தயாரிக்கப்பட்ட வெல்லங்கள் விற்கப்படாமல் அனைத்தும் தேங்கிய நிலையிலேயே உள்ளது. இந்த வாரமாவது கட்டுப்படியாகும் விலைக்கு விற்றால் மட்டுமே எங்களுக்கு பொங்கல் இனிப்பாக இருக்கும், இல்லையெனில் இனிப்பான வெல்லம் செய்வது மட்டும் எங்கள் வேலையாக இருக்கும் என உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!