அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
X

நலவாரிய அட்டை வழங்கிய அமைச்சர் சாமிநாதன்.

சென்னிமலையில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கான சேர்க்கை முகாமினை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை, சென்டெக்ஸ் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டு மொத்தம் 18 வகையான தொழிலாளர்கள் நலவாரியங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 18 வகையான தொழிலாளர்கள் நலவாரியங்களில் இதுவரை 90,240 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள் அனைவரும் அனைத்து நாட்களிலும், 24 மணிநேரமும் செயல்படும் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதள சேவையை பயன்படுத்தி தங்கள் பதிவினை மேற்கொள்ளலாம்.


மேலும், முகாமில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினராக சேர விண்ணப்பித்துள்ளனர். மேலும், ஏற்கனவே பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு புதிய பதிவு அட்டை, கல்வி உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என தெரிவித்தார். இவ்விழாவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்வம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்திரி இளங்கோ, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காயத்திரி, தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி.) அலுவலகம், பிரியதர்ஸினி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story