பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,815 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,815 கனஅடியாக அதிகரிப்பு
X

பைல் படம்.

நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.

பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரத்துக்கும் மேலாக நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் தெங்குமரகடா பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதனால் அணையில் 104 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி ஆற்றில் அதிகபட்சமாக 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. ஆனாலும் அணையின் நீர்மட்டம் 104 அடியிலேயே நீடித்து வருகிறது.இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3815 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடியும், பவானி ஆற்றில் 2 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story