இரட்டைக் கொலை எதிரொலி: ஈரோடு மாவட்டம் முழுவதும் 13,214 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்; தனியாக வசிக்கும் 2,416 முதியவர்களின் விவரங்கள் சேகரிப்பு!

இரட்டைக் கொலை எதிரொலியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 13,214 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தனியாக வசிக்கும் 2,416 முதியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இதுபோன்ற கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர். கூகுள் மேப் மூலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு, நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் ஒன்றிணைத்து 68 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை, காஞ்சிக்கோயில், சென்னிமலை, அறச்சலூர், வெள்ளோடு, கொடுமுடி, சிவகிரி மற்றும் மலையம்பாளையம் காவல் நிலையங்களில் உள்ள குக்கிராமங்களில் தோட்டங்கள், தனியாக உள்ள வீடுகளில் வசித்து வரும் முதியோர்களில் இதுவரை 2 ஆயிரத்து 416 நபர்களின் பெயர் மற்றும் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தாத வீடு மற்றும் தோட்டத்து வீட்டின் உரிமையாளர்களிடம் கேமரா பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 650 இடங்களில் 13 ஆயிரத்து 214 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதுபோன்ற குற்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மேலும் 200 கண்காணிப்பு கேமராக்கள் வைக்க பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu