அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவில் கொட்டி தீர்த்தது கனமழை
அந்தியூரில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வட்டக்காடு, புதுக்காடு, விளாங்குட்டை, கிழங்குகுழி ஆகிய நேற்று நள்ளிரவில் கனமழை கொட்டியது.இரவு 11 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.இந்த பலத்தமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஏரிக்கு செல்லும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து விடும்என்பதால் மின்ஊழியர்கள் அதிகாலை அந்த பகுதியில் மின் சாரத்தை துண்டித்தனர். இதனால் அந்தியூர்-சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
அந்தியூர் தெப்பகுளம் வீதி பள்ளமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த தொடர் மழை காரணமாக அதிகாலை 3 மணி அளவில் காட்டாற்று வெள்ளம் இந்தபகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்தது. இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் வீட்டில் இருந்து எந்த பொருட்களையும் எடுக்க முடியவில்லை.இதையடுத்து அவர்கள் மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.இதனால்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.தொடர்ந்து அந்தந்த வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீட்டில் தேங்கிய மழை நீரை விடிய, விடிய அகற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu