கோபியில் வீட்டிலேயே யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த வாலிபர்: கல்லூரி மாணவிக்கு பிறந்த குழந்தை!

கோபியில் வீட்டிலேயே யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த வாலிபர்: கல்லூரி மாணவிக்கு பிறந்த குழந்தை!
X
ஈரோடு மாவட்டம் கோபியில் வீட்டிலேயே யூடியூப் பார்த்து வாலிபர் பிரசவம் பார்த்ததில் கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபியில் வீட்டிலேயே யூடியூப் பார்த்து வாலிபர் பிரசவம் பார்த்ததில் கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபி கச்சேரிமேடு சீதாம்மாள் காலனியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த சுப்ரீத் (20) என்பவர், 19 வயது இளம்பெண்ணை அவரது மனைவி எனக் கூறிக்கொண்டு அவரது தாயாருடன் வாடகை வீட்டிற்கு குடியிருந்து வந்தார். சுப்ரீத், ஆக்குபேஷனல் தெரபி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. 19 வயது இளம்பெண் கோவையில் உள்ள கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த கல்லூரி மாணவிக்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சுப்ரீத் வீட்டிலேயே யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்து உள்ளார். அதில், மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, மாணவிகளுக்கு ரத்த போக்கு அதிகரிக்கவே, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையுடன், மாணவியை கொண்டு சென்றனர்.

உடனே சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்த வாலிபரும், மாணவியும் கணவன்-மனைவி தானா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இதுகுறித்து கோபி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பொன்மணிக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, செவிலியர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர், வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, குழந்தையின் தொப்புள்கொடி மட்டும் ஒரு பிளாஸ்டிக் கவரில் இருப்பதை கண்டு அதை பறிமுதல் செய்தனர். இதனிடையில், மாணவியின் பெற்றோர் கோபி அருகே உள்ள மொடச்சூரில் வசித்து வருவது தெரியவந்தது. அவர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர், குழந்தையுடன் இருந்த மகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வாலிபர் உண்மையிலேயே மாணவியின் கணவரா? என்பது குறித்து விசாரணை நடத்த சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story