கர்நாடகாவில் எச்எம்பிவி வைரஸ் பரவலால் அந்தியூர் அருகே மாநில எல்லையில் சுகாதாரத்துறை முகாம்
கர்நாடகாவில் எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல் எதிரொலியால் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் அருகே இரு மாநில எல்லையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணிக்க துவங்கி உள்ளனர்.
சீனாவில் பரவிய எச்.எம்.பி.வி. (ஹியூமன் மிடா நிமோ வைரஸ்) தொற்றால் இந்தியாவில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, நோய் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் பயணிப்பவர்களுக்கு மருத்துவ குழுவினரால் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழுவின் சார்பில், தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் வன சோதனைச்சாவடியில் அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கர்நாடகாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்கின்றனர். காய்ச்சல், சளி இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நபர்களின் இரத்த மாதிரி சேகரித்து அரசு மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுப்புகின்றனர். மேலும், அவர்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu