அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள, புகழ் பெற்ற பழமையான பத்ரகாளியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக குண்டம்- தேர்திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த ஆண்டு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மகிஷாசுர வர்தனம் எனும் எருமைக் கிடாய் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து கிராம சாந்தி நிகழ்ச்சி மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை யொட்டி தினமும் இரவு அம்மன் பூத வாகனம், நரி வாகனம், சிம்ம வாகனம் அம்ச வாகனம், யானை வாகனம் சட்ட தேர், புஷ்பபல்லாக்கு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா, நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கடும் வெயில் வாட்டி வருவதால் பக்தர்கள் வசதிக்காக தற்போது அதிகாலை 5 மணிக்கு குண்டம் இறங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று இரவு குண்டம் வளர்க்கப் படுகிறது. பக்தர்கள் பலர் நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து, வரும் 8-ந் தேதி மாலை தேர் திருவிழா தொடங்குகிறது. 11-ந் தேதி வரை அம்மன் தேர் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப் பட்டு தேர்நிலையை அடைகிறது. 12-ந் தேதி பாரி வேட்டையும் , 13-ந் தேதி வசந்தோற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu