பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
பாரியூர் கொண்டத்து காளியம்மன்.
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் கொரோனா கட்டுப்பாட்டுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று (புதன்கிழமை) மாவிளக்கு பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று அதிகாலை 5.45 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக, நேற்று இரவு பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்திய எரிகரும்பு என்றழைக்கப்படும் விறகுகளுக்கு கற்பூரம் ஏற்றி குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் விடிய, விடிய எரிய விடப்பட்டது. வீரமக்கள் என்றழைக்கப்படும் பணியாளர்கள் குண்டத்தை தட்டி சமன் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.தொட்டிபாளையம் பிரிவில் இருந்து குதிரையை ஊர்வலமாக அழைத்து வந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மனிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் 50 அடி குண்டம் முன்பு எழுந்தருளும் நிகழ்ச்சியும், திருக் கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.அதைத் தொடர்ந்து தலைமை பூசாரி ஆனந்த் குண்டத்தின் முன்பு நின்று சிறப்பு பூஜைகள் செய்து வாழைப்பழம், எலுமிச்சை பழம் ஆகியவற்றோடு தீ தனல்களை 3 முறை மேல் நோக்கி வீசினார். பின்னர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வீர மக்கள் உள்பட 60 பேர் மட்டும் குண்டம் இறங்கினர். இந்நிலையில், இருந்து முன்னணியினர் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து குண்டம் இறங்க முயன்றனர்.
அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் இருந்து முன்னணியைச் சேர்ந்த 30 பேரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.மேலும், ஆண்டு தோறும் குண்டம் இறங்க ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் விரதம் இருந்து 2 நாட்கள் முன்பு கோவிலுக்கு வந்து இடம் பிடித்து குண்டம் இறங்குவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டையொட்டி பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதி இல்லை. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu