ஈரோடு மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 26 வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 26 வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 420 மையங்களில் 26 வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாமானது நடைபெற உள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவுதலை தடுக்கும் பொருட்டு, மக்கள் நலனை முக்கியமாகக் கொண்டு மக்களைத் தேடி மருத்துவம் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன் இல்லம் தேடி தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 26ம் தேதி சனிக்கிழமையன்று 26வது கட்டமாக மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை ஒட்டி, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட 420 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக 1.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளது. மேலும், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1680 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 66 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய நபர்களுக்கு கோவாக்சின் வகை தடுப்பூசிகள் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் செலுத்தப்பட உள்ளது. 12 முதல் 15 வயதுடைய மாணவ, மாணவியர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பிரதி வியாழக்கிழமை தோறும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி அனைத்துஅரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களில் இலவசமாக செலுத்தப்பட உள்ளது. தற்போது புதிதாக மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.

ஆகவே, ஈரோடு மாவட்ட பொது மக்கள் வரும் சனிக்கிழமை அன்று நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் அச்சமின்றி, தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா மூன்றாம் அலையை தடுப்பது மட்டுமின்றி தங்களது இன்னுயிரையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story