கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்: யுவராஜா

கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்: யுவராஜா
X

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா.

கள்ளச்சாராய மரணங்களுக்கு ஒட்டுமொத்தமாக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். ஏறக்குறைய 133 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டனர். அதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தமிழக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விஷ சாராயம் குடித்தவுடன் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அந்த துக்க நிகழ்வில் பங்கேற்ற பலரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். ஆனால் நேற்று மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் இரண்டு நபர் இறந்தவுடன் அது கள்ளச்சாராயத்தால் அல்ல என்று கூறினார். வாந்தி மயக்கத்தால் என அறிவித்ததை தொடர்ந்து மேலும் பலர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துள்ளனர். கள்ளச்சாராயம் அருந்தி கண் பார்வை பாதிக்கப்பட்டனர். ரத்த வாந்தி எடுத்தனர் என்ற தகவல் அறிந்த பிறகும் பலர் கள்ளச்சாரத்தை அருந்தி உள்ளனர்.

மெத்தனால் என்ற விஷ சாராயம் அங்கு எப்படி வந்தது? எவ்வாறு பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்பட்டது? போலீசார் வருவாய்த்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது ஏற்கனவே இது குறித்து தகவல் அளிக்கப்பட்டும் போலீசார் நடவடிக்கை இல்லை என்று கூறுகின்றனர்.

முதல்வர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மதுவிலக்கு போலீசார், எஸ்.பி, கலெக்டர் மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் இது போதாது. கள்ளக்குறிச்சி நகர பகுதியிலேயே இது நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள அதிகாரிகள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் பிற இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும். தற்காலிக இடமாற்றம் பணியிடை நீக்கம் என்பது தீர்வாகாது.

கடந்த ஆண்டு விழுப்புரம் மரக்காணம் செங்கல்பட்டு பகுதிகளில் இதே போன்ற கள்ளச்சாராயம் மரணம் ஏற்பட்டது. 23-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் ஆளுங்கட்சி சேர்ந்த சிலருக்கும் கள்ளச்சாராய விற்பனையில் இருந்ததாக கூறப்பட்டது. அப்போது முதல்வர் மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு வாரமும் கள்ளச்சாராயம் குறித்த ஆய்வுகள் நடத்தி அறிக்கை அனுப்ப வேண்டும். பொதுமக்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கவனக்குறைவாக இருக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் குறித்து பொதுமக்கள் 10581 க்கு போன் செய்து தகவல் அளிக்கலாம் என்றெல்லாம் அறிவித்தார்.

அப்போதே கள்ளச்சாராயம் குறித்து கடும் நடவடிக்கை தொடர்ந்து இருந்தால் இப்போது இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்காது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் ஏழை கூலி தொழிலாளிகள். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை டாஸ்மாக் மதுவின் விலையை உயர்த்தி உள்ளது.

எனவே குறைந்தபட்சம் ரூபாய் 200 இருந்தால் மட்டுமே குறைந்த அளவு குடிக்க முடியும். இந்த விலை ஏற்றமும் பலரை கள்ள மதுவை நாடிச் செல்ல செய்துள்ளது என்பது வேதனைக்குரியது. மது விற்பனை செய்த பகுதி அருகிலேயே காவல் நிலையமும் உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் ஆளும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை.

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே டாஸ்மாக் மது விற்கப்படுவதாக அரசு கூறி வருகிறது. ஆனாலும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாத அரசாக ஆளும் திமுக அரசு உள்ளது. கள்ளச்சாராயம் விற்பனைக்கும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

1937 இல் அப்போதைய முதல்வர் ராஜாஜி சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினார். 1948 இல் அப்போதைய முதல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழகத்தில் மதுவிலக்கை அமலாக்கினார். ஆனால் 23 ஆண்டுகள் கழித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. மதுவை மறந்திருந்த மக்கள் மதுவுக்கு அடிமையாகினர். இன்று 6000 மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. அரசு ஆண்டுக்கு ரூபாய் 50,000 கோடி இதன் மூலம் வருமானம் பெறுகிறது. மது விலை உயர்வு காரணமாக மக்கள் கள்ள சாராயத்தையும் கஞ்சாவையும் நாடுகின்றனர்.

பொதுவாக மதுவிலக்கை வலியுறுத்தும் போதெல்லாம் கள்ளச்சாராய சாவுகள் ஏற்படும் என்று அரசு கூறி வந்தது. ஆனால் மதுவிலக்குத் துறை அமைச்சரே மது விற்பனைக்கும் பொறுப்பேற்கிறார் என்பது விந்தையானது. மதுவிலக்கு துறை போலீசார் என ஏராளமானோர் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். டாஸ்மாக் மது கிடைத்த போதும் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. எனவே இதில் ஆளுங்கட்சியினர் போலீசார் வருவாய்த்துறையினர் மற்றும் அதிகாரிகள் தொடர்பு இருப்பதாக மக்கள் சந்தேகிக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்த அரசு இந்த கள்ள சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!