விபத்தில் இறந்தவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி
அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பெரும்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவருக்கு திருமணமாகி மனைவி சுனிதா மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2012-ல் ஈரோட்டிலிருந்து சங்ககிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜுவின் மீது புதுப்பாளையம் அருகே அரசுப் பேருந்து மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ராஜு உயிரிழந்தார். தனது கணவரின் மரணத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி மனைவி சுனிதா மற்றும் வாரிசுதாரர்கள் பவானி சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 19.11.2014-ல் ரூ.11,43,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்கப்படாததால் வட்டியுடன் சேர்ந்து இழப்பீடு வழங்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ரூ.19,93,300 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்தினை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பவானி புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தினை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu