கொரோனா விழிப்புணர்வு: சிலம்பம் சுற்றி மாணவ, மாணவியர் சாதனை

கோபிசெட்டிபாளையம் தனியார் மகளிர் கலைக்கல்லூரி, ஈரோடு சிலம்பம் கமிட்டி மற்றும் நோபல் உலக சாதனை நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டவர்கள், தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை, தற்போது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதற்கு நமது தமிழகமும் தப்பவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை கழுவுவது மிகவும் அவசியமாகும். கொரோனா நோய் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை, பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அவ்வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மகளிர் கலைக்கல்லூரியுடன் இணைந்து, ஈரோடு சிலம்பம் கமிட்டி மற்றும் நோபல் சாதனை புத்தக நிறுவனம் ஆகியன, கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

இதற்காக, தொடர்ந்து சிலம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிலம்பம் கற்ற மாவண மாணவிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்துள்ளனர். இச்சாதனையை நோபல் சாதனை புத்தகத்தின் முகமது செராஜ் அன்சாரி அங்கிகரித்து சான்று வழங்கினார்.

இந்நிகழ்வில் கோபிசெட்டிபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளர் செல்வம் ,தனியார் மகளிர் கலைக்கல்லூரி ஜெகதா லட்சுமணன், தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சந்தோஷ்குமார், தேசிய சிலம்பம் கமிட்டி தியாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture