பவானி ஆற்றின் தடுப்பணையை நடைபாலமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

அம்மாபாளைத்தில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை நடைபாலமாக மாற்றம் செய்து கட்டித்தர வேண்டும் என, திருப்பூர் எம்.பி. சுப்புராயனிடம் பொதுக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள அம்மாபாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை திருப்பூர் எம்.பி சுப்பராயன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாபாளையம் கிராம மக்கள் எம்.பி.சுப்புராயனை சந்தித்து, கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
அதாவது, அம்மாபாளையம் கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் கிராமத்தின் மூன்று பக்கங்களிலும் பவானி ஆறு செல்வதால் அம்மாபாளையம் கிராமம் ஒரு தீபகற்பம் போல் உள்ளது. இதனால், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் , வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர்கள் என அனைவரும் பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.
பவானி ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனால், தற்போது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை நடைபாலமாக மாற்றம் செய்து கட்டித்தரவேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.
பின்னர் எம்.பி. சுப்புராயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பவானி ஆற்றின் குறுக்கே அம்மாபாளையம் பகுதியில் தடுப்பணை கட்டுவதால் அதிகளவு மழை பெய்யும்போது, கிராமத்திற்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது. அவர்கள் கொடுத்திருக்கும் மனு நியாயமானது.
தடுப்பணை கட்டும்போது முறையாக ஆய்வு செய்யாமல் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உரிய ஆய்வு செய்து, அதன்பின்னர் தடுப்பணை கட்டப்படவேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil