இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையத்தில் செயல்படும் ராமேஸ் என்பரது ஏர்லூம் விசைத்தறி கூடத்தில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரவீந்திரகுமார், பீகார் மாநிலத்தை சேர்ந்த நவீன்குமார், சுதேந்திரகுமார் வர்மா, சௌரப்ரஞ்சன் அவரது மனைவி பிரியங்காகுமாரி ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். இதில், நவீன்குமார் மற்றும் சுதேந்திரகுமார் வர்மா ஆகியோர் ரவீந்திரகுமாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6.1.2020 அன்று, இரவுநேரப்பணியில் இருந்த நவீன்குமார், சுதேந்திரகுமார் வர்மா ஆகியோரை காண, மது போதையில் ரவீந்திரகுமார் சென்றுள்ளார். அப்போது இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த ரவீந்திரகுமார் தறிப்பட்டரையில் இருந்த இரும்பு பைப்பால் இருவரையும் தாக்கி கொலை செய்தார்.
பின்னர், சடலத்தை குடோனில் மறைத்து வைத்து விட்டு தறிப்பட்டறை உரிமையாளரிடம் இருவரையும் காணவில்லை என தெரிவித்து, அவர்களுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட இருவரையும் தேடினார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த கவுந்தப்பாடி போலீசார், இருவரது சடலத்தையும் கைப்பற்றியபோது ரவீந்திரகுமார் அங்கிருந்து தப்பினார்.
இதனையடுத்து, சித்தோடு நால்ரோட்டில் நின்று கொண்டிருந்த ரவீந்திரகுமாரை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கானது கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஈரோடு மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், இரட்டை கொலை செய்த ரவீந்திரகுமாருக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 8 ஆண்டு தண்டனையும் 3ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, ரவீந்திரகுமார் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தனகோட்டிராம் ஆஜரானார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu