இன்று முதல் தளர்வுடன் ஊரடங்கு : ஈரோட்டில் வாகனப் போக்குவரத்து மீண்டும் அதிகரிப்பு

இன்று முதல் தளர்வுடன்  ஊரடங்கு : ஈரோட்டில் வாகனப் போக்குவரத்து மீண்டும் அதிகரிப்பு
X
ஈரோட்டில் இன்று முதல் தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வழக்கத்தைவிட இன்று இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வந்தது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி பாதிப்பில் தமிழகம் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை அறிவித்தது ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் இருந்து வந்தது. இதன் பயனாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது. ஆனால் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம் திருச்சி போன்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து இன்று முதல் சில தளர்வுகள் உடன் ஊரடங்கு வரும் 14ஆம் தேதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலில் வந்துள்ளது.

அதன்படி தனியாக செயல்படும் காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கழித்து காய்கறி, பலசரக்கு , மளிகைக் கடைகள் திறந்ததால் மக்கள் காலையிலேயே சென்று வேண்டிய பொருட்களை வாங்கினர்.இதேபோல் இறைச்சிக்கடை, மீன் கடைகளில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. வ. உ. சி. பகுதியில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தைகள் செயல்பட அனுமதி இல்லை.

இதேபோல் டாஸ்மாக் கடைக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வகையான கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள், மற்ற உணவகங்கள் வழக்கமான நடைமுறையில் தொடர்ந்து செயல்படும். அதாவது காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 12 முதல் 3 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 9 மணி வரையும் பார்சலில் மட்டும் உணவு வழங்கப்படும். தேநீர் கடைகளுக்கு வழக்கம்போல் அனுமதி இல்லை. ஆனால் அதேநேரம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 30 சதவீத பணியாளர்களுடன் பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 30 சதவீத பணியாளர்கள் பணிக்கு வந்தனர்.

நடமாடும் வாகனங்கள் மூலமும் தள்ளுவண்டிகள் மூலமும் காய்கறி பழவகைகள், டோர் டெலிவரி மூலம் மளிகை பொருட்கள் வழக்கம்போல் விநியோகம் செய்யப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் தங்குதடையின்றி சென்றன. மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள், பால் விற்பனை வழக்கம் போல் செயல்பட்டன. இதன் காரணமாக இன்று ஈரோடு மாவட்டத்தில் வழக்கத்தைவிட சாலைகளில் போக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஊரடங்கு சமயத்திலேயே அதை மதிக்காமல் அதைப்பற்றி கவலைப்படாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் சாலைகளில் சுற்றி வந்தனர். இன்று முதல் தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வழக்கத்தைவிட இன்று இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம் மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, பகுதிகளில் வழக்கத்தைவிட போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. மக்கள் முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப் பட்டது போல் ஆங்காங்கே சாலைகளில் அதிகமாக நடமாடி வந்தனர். இதனால் மீண்டும் மாவட்டத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!