கொரோனா விதிமீறல் : பிரபல நகை கடைக்கு பூட்டு

கொரோனா விதிமீறல் : பிரபல நகை கடைக்கு பூட்டு
X
விதிகளை மீறியும், கொரோனா தடுப்பு நடவடிக்களை பின்பற்றாமலும், வியாபாரம் செய்த பிரபல தனியார் நகைக்கடையை வருவாய்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுபாடுகளை தமிழக அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரிய கடைகள் வணிக வளாகங்கள் தியேட்டர்கள் உள்ளிட்டவைகள் கடந்த 26ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் மூடவேண்டும் என அரசு உத்தரவிட்டது. குறிப்பாக 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகளை பெரிய கடைகளாக கருதி அவற்றை மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


அதன் அடிப்படையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் என 3 ஆயிரம் சதுர அடிக்களுக்கும் மேல் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று அரசின் உத்தரவை மீறி கொரோனா நோய் தொற்று பரவும் விதமாக கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் செயல்படும் பிரபல தனியார் நகைக்கடையில் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதித்து குளிர்சாதனப்பெட்டியையும் பயன்படுத்தி வியாபாராத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் நகைக்கடையில் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். கொரோனா விதிமுறைகளை மீறி கடைக்குள் முககவசம் கூட அணியாமல் 150க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால் வாடிக்கையாளர்களை வெளியில் அனுப்பி கடையை பூட்டி சீல் வைத்தனர். இதனால் கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story