கோபியில் 2 மாதங்களில் பறிமுதல் செய்த 10லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் அழிப்பு

கடந்த இரு மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் அழித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாத காலமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. முழு ஊரடங்கையொட்டி மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் சிலர், அண்டை மாநிலங்களுக்கு சென்று மதுபானங்களை சட்ட விரோதமாக வாகனங்களில் கடத்தி வந்தனர். இன்னும் சிலர் ஊரடங்கிற்கு முன்பாகவே மதுபானங்களை வாங்கி மறைத்து வைத்து கொண்டு ஊரடங்கின்போது அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

அவ்வகையில், கோபிச்செட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில், ஊரங்கின் போது சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தி வந்ததாக 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மதுவிலக்கு காவல்நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

அவ்வாறு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் இன்று, கோபி காவல் நிலையம் அருகே உள்ள காலி இடத்தில், கோட்ட கலால் அலுவலர் ஷீலா முன்னிலையில் உடைத்து அழிக்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!