மலைத்தேனீக்கள் கொட்டி 4 மாணவிகளுக்கு காயம்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெரியார்நகர், இந்திராநகர், ஆலங்காட்டுப்புதூர், கங்கம்பாளையம், செங்கோட்டையன்நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மிதி வண்டிகள் மூலம் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்றுவருவது வழக்கம்.
நீண்ட நாள் கழித்து, முதல்நாளான இன்று பள்ளிக்கு செல்ல மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வந்தனர். கங்கம்பாளையம் செங்கோட்டையன் நகர், பெரியார் நகர், ஆலாங்காட்டூர் ஆகிய பகுதிகளில் பேருந்து போக்குவரத்து இல்லாததினால் அனைத்து மாணவ மாணவிகளும் அரசு வழங்கியுள்ள மிதிவண்டிகள் மூலமாகவே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் செங்கோட்டையன் நகர் பகுதியிலிருந்து பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவிகளான தேவராஜ் மகள் பவித்ரா, சுப்பிரமணியம் மகள் மைவிழி, மகாலிங்கத்தின் மகள் மோகனபிரியா, காமராஜ் மகள் மேகவர்ஷினி ஆகிய நான்கு பேரும் பொலக்காளிபாளைத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கு மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் கங்கம்பாளையம் பகுதியில் சென்றபோது பறந்து வந்த மலைத்தேனீகள் மாணவிகளை சரமாரியாக கொட்டத் தொடங்கியுள்ளது. அதில் நிலைகுலைந்து போன மாணவிகள் செய்வதறியாது திகைத்தும் பயந்தும் அருகில் உள்ள குடியிருப்பு வீட்டினுள் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கேயும் துரத்தி கடித்த மலைத்தேனீயை விரட்ட அந்த வீட்டு உரிமையாளர் போராடி நான்கு மாணவிகளையும் வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் பெற்று மாணவிகள் தஞ்சமடைந்த வீட்டுக்கு வந்து மாணவிகளை மீட்டனர்.
கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். வரும் வழியில் வாகனத்தில் வந்த மாணவி பவித்ரா மயக்கமடையவே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மூன்று மாணவிகளும் முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால் பவித்ரா என்ற மாணவி மட்டும் தற்போது ஐசியுவில் தொடர்சி சிகிச்சையில் உள்ளார். பள்ளிக்கு சென்ற முதல்நாளில் மாணவிகள் நான்கு பேரை மலைத்தேனீக்கள் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu