அமைச்சர் நிகழ்ச்சியில் நூலகர்கள் முற்றுகை
ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நூலகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனிரெண்டாம் வகுப்பு கல்வித்தகுதியில் சிஎல்ஐஎஸ் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு பெற்ற 1514 பேர் ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணிக்கு சேர்ந்த போது ரூ.4500 மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 13 ஆண்டுகளில் தற்போது ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ,ஏழாவது காலமுறை ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ கிடைக்காமல் உள்ள நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்ற திருமணமண்டபத்தின் முன்பு தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையனிடம் ஊர்ப்புற நூலகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தித்து மனு அளித்தனர். அதில் ஊர்ப்புற நூலகர்கள் 1500 பேர் கடந்த 13 ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும் மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், இது குறித்து முதல்வர் கவனத்திற்கு எடுத்துசெல்வதாக உறுதியளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu