ஆன்லைன் முதலீடு பணம் வராததால் ஆள் கடத்தல்: திமுக பிரமுகர் உட்பட நான்கு பேர் கைது

ஆன்லைன் முதலீடு பணம் வராததால் ஆள் கடத்தல்:  திமுக பிரமுகர் உட்பட நான்கு பேர் கைது
X

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் எல்.எம்.பாலப்பாளையத்தை சேர்ந்தவர் சாமுவேல்சுரேன். இவர் தனது மனைவி நர்மதா மற்றும் மகள் திவேனா கேத்ரின் (6) ஆகியோருடன் வசித்து வருகிறார். சாமுவேல்சுரேன் ஆன்லைன் பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக இலாபத்துடன் திருப்பி தருவதாக கூறி கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காததால், இவரிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தினந்தோறும் இவரது வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். இதனால் இவர் குடும்பத்துடன் கோபி துது நகரில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அதிகாலை இவருக்கு பணம் கொடுத்திருந்த சென்னிமலையை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மற்றும் வெங்கடேஸ் ஆகியோர் கவுந்தப்பாடி, பாலப்பாளையத்தில் உள்ள சாமுவேல் சுரேன் வீட்டிற்கு வந்து அலைபேசியில் அழைத்ததின் பேரில், கோபியில் தங்கியிருந்த சாமுவேல் சுரேன புறப்பட்டு பாலப்பாளையம் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்த சாமுவேல் சுரேன் மாலை வரை வீடு திரும்பாததாலும், அலைபேசியில் தொடர்பு கொள்ளாததாலும், சந்தேகம் அடைந்த அவரது மனைவி நர்மதா கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கோபியிலிருந்து புறப்பட்டு பாலப்பாளையம் வந்த சாமுவேல்சுரேஷை இரண்டு கார்களில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை கவுந்தப்பாடி, காஞ்சிக்கோவில் பிரிவு அருகே கவுந்தப்பாடி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த காரில் இருந்து கடத்தப்பட்ட சாமுவேல் சுரேன் என்பவரை கீழே தள்ளி விட்டு, காருடன் திரும்பி தப்பிச்செல்ல முற்பட்டவர்களை சுற்றி வளைத்தனர். அதில் பிடாரியூர் பஞ்யாத்துணைத்தலைவர் (திமுக) சுப்பிரமணியம் (36) உட்பட ஈஸ்வரமூர்த்தி (39) சுப்பிரமணியன் (47) பிரபாகரன் நான்கு பேர்கள் மட்டுமே பிடிபட்டனர். உடன் வந்த பவானியை சேர்ந்த சிவராஜா, ஸ்ரீதரன், விஜயமங்கலத்தை சேர்ந்த வெங்கடேசன், சென்னிமலையை சேர்ந்த வெங்கடேஷ்குமார் மற்றும் மோகன் (எ) சந்திரமோகன் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.

பிடிபட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தாங்கள் சாமுவேல் சுரேன் என்பவரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய இலட்ச கணக்கில் பணம் கொடுத்ததாகவும், பலமுறை பணத்தை திருப்பி கேட்டும், கொடுக்காததால், பணம் கொடுத்து ஏமாந்த தாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடத்தி சென்று, தங்களது பணத்தை திரும்ப கேட்டு அடித்து மிரட்டி கேட்டதாக கூறினர்.

கடத்தப்பட்ட சாமுவேல் சுரேன் என்பவரை விசாரித்ததில், தான் மேற்படி நபர்களிடம் பெற்ற பணத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், பணம் திரும்ப வந்தவுடன் அனைவருக்கும் திருப்பி கொடுப்பதாகவும் கூறினார். மேலும் தன்னை கடத்திய நபர்கள் காரில் கூட்டி கொண்டு ஆசனூர் மற்றும் சென்னிமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியதாக கூறினார். மீட்கப்பட்ட சாமுவேல் சுரேன் என்பவருக்கு உடலில் ஆங்காங்கே சிறு சிறு காயங்கள் இருந்ததால், காவலர்கள் பாதுகாப்புடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சாமுவேல் சுரேனை கடத்திச் சென்று அடைத்து வைத்து அடித்து துன்புறுத்திய நபர்கள் மற்றும் அவர்கள் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!