தங்கை மகள்களுக்கு சீர்வரிசை- தாய்மாமன் அசத்தல்

ஈரோடு மாவட்டத்தில் தங்கை மகளுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் சீர் கொண்டு சென்ற தாய்மாமன்,சடங்கு நிகழ்வையும் பாரம்பரிய முறையில் செய்து அசத்தினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வருபவர் ராஜா. இவரது மனைவி தாராதேவியும் மருத்துவர் என்பதால் இருவரும் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். மருத்துவர் ராஜாவின் தங்கையான மோகனப்பிரியாவிற்கு திருமணமாகி ரிதன்யா மித்ராஸ்ரீ என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அந்த இரு பெண்களும் பூப்பெய்து விடவே இருவருக்கும் சடங்கு செய்யும் நிகழ்வு மோகனபிரியா – முத்துக்குமார் தம்பதிகளின் விவசாய தோட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

இவ்விழாவிற்கு தாய்மாமன் சீதனம் அளிக்கும் வழக்கப்படி தாய்மாமனான ராஜா, தங்கையின் மகள்களுக்கு சிறப்பான சீர் கொடுக்க திட்டமிட்டு அதையும் பாரம்பரிய முறையிலும் அனைவரும் வியக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்ற எண்ணத்திலும் 100க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வகைகளை தாங்களே தயாரித்து 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர்கள் புடை சூழ கோபிசெட்டிபாளைத்திலிருந்து கள்ளிப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு மருத்துவரான ராஜாவே மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். அவரது பின்னால் உறவினர்களும் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கார்களிலும் பின்னால் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாட்டுவண்டியில் தாய்மாமன் சீர் கொண்டு சென்றதை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து வியந்தனர். மேலும் சடங்கு நடைபெறும் வீட்டிலும் பாரம்பரிய முறையிலும் நவநாகரீக காலத்திற்கு முன்பு முன்னோர்கள் காலத்தில் செய்யப்பட்ட அலங்காரம் போல் தென்னை ஓலையில் வெய்த அழகு பொருட்களும், ஓலை குடிசையும் பாரம்பரிய நெல்களை கொட்டி அதில் சீர் வரிசை தட்டுகளை வைத்தனர். அதேபோல் பித்தளை பாத்திரங்களில் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளும் உற்றார் உறவினர்களை 30 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளியது.

காங்கேயம் காளைகள் வெள்ளாடுகள் போன்ற கால்நடைகள் கண்காட்சியும் உறவினர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பாரம்பரியத்தை பறைசாற்றவும் வருங்கால சந்ததிகளுக்கு பாரம்பரியத்தை நினைவு கூறவும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாரம்பரிய முறைப்படி தனது தங்கை மகள்களுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தியுள்ளதாக தாய் மாமன் ராஜா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்