கோபிசெட்டிபாளையம்: வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

கோபிசெட்டிபாளையம்: வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
X

நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி அங்காடி கட்டும் பணியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி அங்காடி கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் தரைதளத்தில் சேமிப்பு கிடங்கு, முதல் தளத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், இரண்டாம் தளத்தில் கூட்ட அரங்கு மற்றும் விருந்தினர் அறையுடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


அதனைத் தொடர்ந்து, லக்கம்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் சுமார் 3.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விரைவில் பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சுந்தரமூர்த்தி, கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) விஸ்வநாதன், உதவி இயக்குநர் (வேளாண்மை) தீனதயாளன், லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி, செயல் அலுவலர் சண்முகம், கோபி வட்டாட்சியர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!