பவானி அருகே குறிச்சி மலைப்பகுதியில் கிராவல் மண் கடத்தியவருக்கு ரூ.33.87 லட்சம் அபராதம்!

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி மலைப்பகுதியில் கிராவல் மண் கடத்தியவருக்கு ரூ.33.87 லட்சம் அபராதம் விதித்து கோபி சார் ஆட்சியர் சி.சிவானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம், குறிச்சி மலைப்பகுதியில் கிராவல் மண் வெட்டிக் கடத்தப்படுவதாகவும், அரசு புறம்போக்கு நிலத்தை சமப்படுத்தி,வீட்டு மனைகளாக பிரித்தும், கான்கிரீட் ரோடுகள் அமைத்தும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வருவாய் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். இது தொடர்பான விவகாரத்தில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு, அந்தியூர், பச்சாம்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (47) என்பவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் திருடி எடுக்கப்பட்ட மண்ணின் அளவு மற்றும் மதிப் பினை ஆய்வு செய்ததில் அரசு கரடு புறம்போக்கு மற்றும் பூமிதான போர்டு நிலங்களில் மண் அள்ளப்பட்டது உறுதியானது. மேலும், அரசு கரடு புறம்போக்கு நிலத்தில் இருந்து 4365.6 கன மீட்டர் கிராவல் மண் அனுமதியின்றி வெட்டி எடுத்தது உறுதியானது.
இதைத்தொடர்ந்து, ஈரோடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரின் அறிக்கையின்படி கோபி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு ஆஜராக மோகனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
எனவே கிராவல் மண் அனுமதியின்றி வெட்டி கடத்தி சென்ற மோகனுக்கு ரூ.33 லட்சத்து 87 ஆயிரத்து 710 அபராதம் விதித்து கோபி சார் ஆட்சியர் சி.சிவானந்தம் உத்தரவிட்டார். இந்த தொகையை முழுவதும் வசூலித்து அறிக்கை அனுப்புமாறு பவானி வட்டாட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu