கணவரை கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை: கோபி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கணவரை கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை: கோபி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
X

இந்துமதி.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கணவரை கொலை செய்த வழக்கில், மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு கோபி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார். இவர், இந்துமதி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர், இருவரும் சொந்த ஊரில் வசித்து வந்தனர். இந்நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குமாரின் மனைவி இந்துமதி, கணவரை பிரிந்து கோபியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்துமதிக்கு தனது தாய் வீட்டின் அருகே வேலை செய்து வந்த ஸ்ரீதர் எனபவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இதனையடுத்து, இந்துமதிக்கும், கணவர் குமாருக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனையை உறவினர்கள் பேசி சமாதானம் செய்து மீண்டும், கணவன் மனைவி இருவரும் குமாரின் சொந்த ஊரில் வசித்து வந்தனர்.

இதனிடையே, இந்துமதி கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் கள்ளக்காதலன் ஸ்ரீதருடன் கொண்டிருந்த நட்பை போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தொடர்ந்து வந்துள்ளார். இந்துமதியின் கணவர் குமாருக்கு தனது மனைவி வேறொருவருடன் பழகுவதை அறிந்து மனைவியை கண்டித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 9.07.2020 அன்று கோபி அருகே உள்ள பள்ளத்தோட்டம் பகுதியில் சாக்கு பையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொலை செய்யபட்டு கிடந்த உடல் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்த போது கொலை செய்யப்பட்டு இறந்த உடல் குமார் என்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, குமார் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்ட குமாரின் மனைவி இந்துமதி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் குமாரை கொலை செய்து அவரின் உடல் துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் மூட்டையாக கட்டிய பின் அந்த உடலை கள்ளக்காதலன் ஸ்ரீதரின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் வைத்து ஊருக்கு வெளியே வீசியது தெரியவந்தது.

இந்த கொலை குறித்த வழக்கு கோபி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று (10ம் தேதி) வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குமாரை கொலை செய்த குற்றத்திற்காக இந்துமதி மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவருக்கும், ஆயுள் தண்டனையுடன், இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்த இந்த தீர்ப்பு கோபிசெட்டிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!