மாணவி மாயம்: பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மாணவி மாயம்: பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
X

மாணவியை காணவில்லை என்பதால் பள்ளியை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்கள் 

பள்ளி நிர்வாகத்திடம் யார் என்று விசாரிக்காமல் எப்படி அனுப்பி வைத்தனர் என கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பூனாட்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த மாணவி வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இதையடுத்து ஒரு வாலிபர் நேற்று பள்ளிக்கு வந்து அந்த மாணவிக்கு தான் மாமா என்று கூறி விட்டு உள்ளே சென்று அந்த மாணவியை பள்ளியில் இருந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஒரு வாலிபர் மாமா என்று கூறி மாணவியை அழைத்து சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் யார் என்று விசாரிக்காமல் எப்படி அனுப்பி வைக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்தி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவியின் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை அம்மாபேட்டை-அந்தியூர் மெயின் ரோடு பூனாட்சி பகுதியில் அந்த தனியார் பள்ளி அருகே ஒன்று திரண்டனர். பள்ளியை முற்றுகையிட்ட அவர்கள் நிர்வாகத்தை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, பள்ளிக்கு வந்த வாலிபர் மாணவியை கடத்தி சென்று விட்டார். எனவே பள்ளி நிர்வாகம் மீதும், மாணவியை கடத்தி சென்றவர் மீதும் நடவடிக்கை எடுக்க என கூறினர். இது பற்றி தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் நேரில் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil