வயதான தம்பதியினரை கொலை செய்த கும்பல் கைது: மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி.
ஈரோடு அருகே வயதான தம்பதியினரை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்து நகை மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 11 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி கூறியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே விவசாய தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் கடப்பாரை மற்றும் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளை கடந்தும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
காவல்துறை விசாரணை குறித்து பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வந்த சூழ்நிலையில் தற்பொழுது இந்த வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகளில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த கொலை வழக்கு காவல் துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிசிடிவி கேமரா எதிலும் சிக்காமல் இருப்பதற்காக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு கீழ்பவானி பாசன கால்வாயில் இறங்கி அதன் வழியே நடந்து வந்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடைய கை ரேகையோ முகம் மற்றும் அடையாளமோ தெரிவதில் தங்களுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது. எனவே தான் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதில் மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
தங்களுக்கு கிடைத்த மிகச் சிறிய தடயத்தை கொண்டு மிகப் பெரிய அளவில் துப்பு துலக்கி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வதாகவும் கூறினார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 25 க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், மேற்கு மண்டலத்தில் போதை பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பது குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மேற்கு மண்டல டிஐஜி சரவண சுந்தர், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu