திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி
X

திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வேட்பாளர்கள் சுப்பராயன், சீதாலட்சுமி, முருகானந்தம், அருணாசலம்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி:-

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

வாக்காளர்கள்:-

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1,744 வாக்குச்சாவடிகள் உள்ளன. 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண்கள், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண்கள், 250 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர்.

திமுக கூட்டணி:-

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.சுப்பராயன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த இவர் கடந்த முறை இதே கூட்டணியில் வெற்றி பெற்று எம்பியாக உள்ளார். அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக:-

அதிமுக வேட்பாளராக அருணாச்சலம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பெருந்துறையை சேர்ந்தவர். ஈரோடு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றுள்ளதால் ஈரோட்டைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கினால் மக்கள் ஆதரவு இருக்கும் என்ற எண்ணத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வரை அதிமுக வேட்பாளராக களமிறக்கி உள்ளது.

பாஜக:-

பா.ஜனதா கட்சி வேட்பாளராக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலம் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கும் பகுதி என்பதால் இம்முறை கண்டிப்பாக சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என முனைப்பில் பாஜக இருக்கிறது.

மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும் போட்டியிடும் நிலையில், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம் களமிறக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்து திருப்பூர் தொகுதியை தனதாக்கிக் கொள்ள அதிதீவிர முயற்சியை பா.ஜனதாவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி:-

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அவர் கடந்த வாரமே பிரசாரத்தை தொடங்கி ஓட்டு வேட்டையாடி வருகிறார். வெற்றியை கைப்பற்ற திட்டமிட்டு பிரசார பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

நான்கு முனைப் போட்டி:-

ஆகவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்குள்ளேயே பிரதான போட்டிகள் இருக்கும் நிலையில், நான்கு முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.

வெற்றி வாய்ப்பு:-

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை அந்தியூர், திருப்பூர் தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதி எம்எல்ஏக்களாக திமுகவை சேர்ந்தவர் கள் இருக்கிறார்கள். மீதம் உள்ள 4 தொகுதிகளும் அதிமுக எம்எல்ஏக்கள் வசம் உள்ளது. இதனால் அதிமுகவினர் தீவிர களப்பணியாற்றி தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.

திமுகவுக்கு கூட்டணி பலமாக உள்ளது. ஏற்கனவே திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை கைவசம் வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்டு இந்த முறையும் கூட்டணி பலத்துடன் வாக்குகளை வேட்டையாடி வெற்றியை தன் வசப்படுத்தலாம் என்று நினைத்து பணியாற்றி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!