ஈரோட்டில் 2 ஓட்டல்களில் கெட்டுப் போன 18 கிலோ இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

ஈரோட்டில் 2 ஓட்டல்களில் கெட்டுப் போன 18 கிலோ இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!
X
ஈரோட்டில் 2 ஓட்டல்களில் குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த கெட்டுப் போன 18 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார்,சதீஷ் குமார் ஆகியோர் ஈரோடு மாநகர பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் கடந்த இரண்டு நாட்களாக திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆய்வின் போது, பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் இரண்டு கடைகளில் தயாரிக்கப்பட்ட நிலையில் குளிர் பதன பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த இறைச்சி வகைகள் 18 கிலோ அளவில் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட உணவுகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரமில்லாமல் சமையல் கூடத்தை பராமரித்த வகையில் இரண்டு உணவகங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.தங்கவிக்னேஷ் கூறுகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட முழுவதும் அசைவ உணவகங்களில் தொடர் ஆய்வு நடந்து வருகிறது. உணவகத்தை சுகாதாரம் இல்லாத முறையில் நடத்தி வருவது, பழைய இறைச்சி வகைகளை குளிப்பதனப்பட்டியில் சேமித்து வைப்பது, உணவு வகைகளில் செயற்கை வண்ணங்கள் சேர்ப்பது, அஜினோமோட்டோ போன்ற செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்துவது, தரமற்ற மூலப் பொருட்களைக் கொண்டு உணவுப் பொருட்கள் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Next Story