ஈரோட்டில் ரசாயனம் தெளித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 டன் வாழைத்தார்கள் பறிமுதல்

ஈரோட்டில் ரசாயனம் தெளித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 1 டன் வாழைத்தார்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி வணிக வளாகத்தில், செயற்கை முறையில் ரசாயனங்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக புகார் வந்தது.
அதன் அடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார், எழில் ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின் போது, வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள், மாம்பழங்கள், மற்றும் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இடங்களில் இன்று (மார்ச் 28) அதிகாலை இரண்டு மணி முதல் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது, ரசாயனம் கலந்த கலவையை தெளித்து பொதுமக்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் எடை கொண்ட வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெண்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி உரக்கிடங்கில் அழிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறியதாவது, எந்த ஒரு ரசாயனத்தைக் கொண்டும் உணவுப் பொருட்கள் மீது படும் படி அல்லது தெளித்த வகையில் பழுக்க வைப்பது என்பது முற்றிலும் தவறானது.
இதனால் வயிற்றுக் கோளாறு, ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தற்போது தவறு புரிந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், மாவட்ட வருவாய் அலுவலர் முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ல் அபராதம் விதிக்கப்படும், மாவட்டம் முழுவதும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
மேலும், பழ குடோன்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் விரைவில் நடத்தப்படும். பொதுமக்கள் உணவு சம்பந்தப்பட்ட புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu