பெருந்துறையில் மயோனைஸ் தயாரிப்பு, பயன்பாடு குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு!

பெருந்துறையில் மயோனைஸ் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் பதப்படுத்தப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் உண்பதால் சால்மொனெல்லா வகை பாக்டீரியா மற்றும் லிஸ்ட்டீரியா மோனோசைட்டோ ஜீன்ஸ் மூலம் இரைப்பை மற்றும் குடல் தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பதப்படுத்தப் படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரிப்பு ,சேமிப்பு ,விநியோகம் மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு கடந்த 08.04.2025 முதல் ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, உணவுபாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படியும்,உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலரின் அறிவுரையின்படியும் பெருந்துறை நகரிலும் பைபாஸ் மற்றும் விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் உள்ள தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படும் 30க்கும் மேற்பட்ட உணவகம் மற்றும் பாஸ்ட்புட் கடைகளில் மையோனைஸ் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட மையோனைஸ் பயன்பாடு எங்கும் கண்டறியப்படவில்லை.உணவகங்களில் உணவருந்திக் கொண்டிருந்த பொது மக்களிடமும் மையோனைஸ் வழங்கப்படுகிறதா என விசாரித்து பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உண்பதால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உணவக உரிமையாளர்களிடம் சைவமயோனைஸ் பயன்படுத்துவது குறித்தும் சவர்மா, கிரில் சிக்கன் ,தந்தூரி சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை நன்றாக வேக வைத்து 4 மணி நேரத்திற்குள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் வேக வைக்கப்பட்ட அசைவ உணவுகளை பிரீசரில் வைத்து மறு பயன்பாடு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர் மற்றும் கேரி பேக் மூலம் உணவுப் பொருள்கள் பார்சல் செய்யக்கூடாது எனவும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட வடை போண்டா பஜ்ஜி போன்ற பலகாரங்களை செய்தித்தாள்களில் வைத்து பொது மக்களுக்கு வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினர்.ஆய்வின் போது தடை செய்யப்பட்ட கேரிபேக் மற்றும் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வைத்து வழங்கிய பேக்கரி உரிமையாளருக்கு 3,000 ரூபாய் அபராதமும் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவரில் உணவு பொருள்கள் பேக் செய்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu