ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிகாரிகளுக்கு குப்பை அள்ளும் வாகனத்தில் உணவு
அதிகாரிகளுக்கு குப்பை சேகரிக்கும் வானகத்தில் உணவு எடுத்துச் செல்லும் ஊழியர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிகாரிகளுக்கான உணவுப் பொருட்களை குப்பை சேகரிக்கும் வாகனத்தில் எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி வரை நடந்தது. கடந்த 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களமிறங்கினர். காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளராக ஆனந்த் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர், 6 மணி வரை வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 238 வாக்குச்சாவடி மையங்களில் 237 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஈரோடு ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போதைய நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.இதுவரை 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளதாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தில் உணவு கொண்டு செல்லப்பட்டதால் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், காலை மற்றும் மதிய உணவுக்கான ஆர்டர் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் கொடுக்கப்பட்டது. உணவகத்தில் இருந்து காலை மற்றும் மதியம் உணவுகளை எடுத்துச் செல்ல குப்பை சேகரிக்கும் வாகனத்தை மாநகராட்சி பயன்படுத்தியது என தெரிவித்தார்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், குப்பை சேகரிக்க வாகனம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டாலும், சுத்தமாக காட்சியளிக்கிறது. இந்த வாகனத்தில் அவர்களுக்கான உணவுகள் கொண்டு செல்லப்பட்டதால் அவர்கள் எரிச்சலடைந்தனர் என தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஆர்.சிவகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu