கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்: விவசாயிகள் கவலை
கீழ் பவானி வாய்க்கால் - கோப்புப்படம்
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒரு சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2.47 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
இந்த வருடம் கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்ற நிலை ஏற்பட்டது. விவசாயிகள் 15ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனையேற்று திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்துகொண்டு மதகின் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவைத்தார். இதில் பங்கேற்ற விவசாயிகள் வாய்க்காலில் வெளியேற்றப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவினர். நேற்றுமுன்தினம் மாலை 5.45 மணி அளவில் வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 120 நாட்களுக்கு படிப்படியாக அதிகரித்து திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில மணி நேரத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் தற்போது தண்ணீர் திறந்தால் பிரச்னை ஏற்படும் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
திறக்கப்பட்ட ஒருசில மணி நேரத்திலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கீழ் பவானி பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் இன்று ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu