வாழ்வாதாரம் காக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் மனு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று, ஒலி- ஒளி, ஜெனரேட்டர், சாமியானா பந்தல், பர்னிச்சர், சமையல், பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஒலி- ஒளி ஜெனரேட்டர் பந்தல் சாமியானா, பர்னிச்சர், சமையல், பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் செய்யும் தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
எங்களது தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் தரக்கூடியது இல்லை. விசேஷங்கள், விழாக்கள் நடைபெறும் காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்தான் வேலை இருக்கும். இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான கடை உரிமையாளர்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் பொருட்களை முதலீடாக்கி தொழில் செய்து வருகின்றனர். இத்தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் மூலம் குறைந்த அளவு வருமானம் ஈட்டி வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் தொழில் நடத்த முடியாமல் வருவாயிழந்து மிகவும் பாதிக்கப்பட்டோம்.
தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம். பல லட்சம் பேர் ஈடுபட்டுள்ள தொழில்கள் செய்யும் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் காத்திட, தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் தொழிற்சாலைகள் சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் 50 சதவீதம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல திருமண மண்டபங்களிலும் 50 சதவீத விருந்தினர்களுடன் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும், அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அனைத்து மதம் சார்ந்த சமூக நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த கூட்டங்கள் நடத்த சிறப்பு அனுமதி அளித்து, எங்களது வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு, மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu