கொரோனாவால் கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை

ஈரோட்டில், கொரோனாவால் கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல், மனைவி தனது இரு குழந்தைகளுடன் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே மாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் சென்னையில் உள்ள நீல்கிரீஸ் நிறுவனத்தில், முதுநிலை மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் தனது மனைவி நித்யா, 6 வயது மகன் மற்றும் 11 வயது மகள் ஆகியோருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார்.

கடந்த மே மாதம் 2 ம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாஸ்கர் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மே மாதம் 9 ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். கொரோனாவால் தனது கணவர் பாஸ்கர் உயிரிழந்ததால் மனைவி நித்யா சில நாட்களாக மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இதனையடுத்து, ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள, லட்சுமி கார்டனில் இருக்கும் தனது தாயாரின் வீட்டிற்கு, இரு குழந்தைகளுடன் நித்யா வந்துள்ளார். இருப்பினும் கணவர் இறந்த துக்கம் தாளாமல் இருந்த நித்யா, சல்பாஸ் மருந்தை தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அவரது பெற்றோர், அக்கம்பககத்தினர் உதவியுடன் அவர்கள் மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிகிச்சை பலனளிக்காமல் தாய் நித்யா மற்றும் 6 வயது மகன் ஆகிய இருவரும் சில மணி நேரத்திலேயே உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் 11 வயது மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் கொரோனாவால் உயிரிழந்ததால் மனமுடைந்து, குடும்பமே தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!