லைசன்ஸ் வாங்க இனி ஆர்.டி.ஓ. ஆபிஸில் வாகனத்தை ஓட்டிக்காட்ட தேவையில்லை: மத்திய அரசு
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் வாகன பெருக்கம் என்பது மிக அதிக அளவில் உள்ளது. இதேபோல், வாகனம் ஓட்டுபவர்களில் சிலர் அனுபவமும் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் விபத்துகளும் அதிகளவில் நிகழ்கின்றன.
மேலும் சில தனியார் வாகன ஓட்டுநர் பயிற்சி மையங்களில் உரிய பயிற்சியை வழங்காமல், பணத்தை பெற்றுக்கொண்டு வாகன ஓட்டுநர் உரிமத்தை தங்களது மாணவர்களுக்கு பெற்று தருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களை தவிர்த்திடும் வகையில் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அரசு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுபவர்கள் உயர்தர பயிற்சியை பெற பிரத்யேக ஓடுதளம், பயிற்சி கருவிகளை பொருத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் கீழ் தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி படிப்புகளை இந்த மையங்கள் கொண்டிருக்க வேண்டும். இந்த மையங்களில் தேவை சார்ந்த சிறப்பு பயிற்சிகளை வழங்கவும் அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், லைசன்ஸ் பெற விரும்புவோருக்காக வழங்கப்பட்டுள்ள சலுகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்படும் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி வரும் ஜூன் 1ம் தேதி முதல் புதிய விதிமுறை அமல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும்போது, நிபுணத்துவம் பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் சாலை விபத்துகள் குறையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu