ஈரோடு 5.21 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோட்டில் கடந்த வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர்,மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தினமும் 2 ஆயிரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் நோய் பாதித்தவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோய்களின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எவ்வித அறிகுறியும் இன்றி நோய்த் தொற்றால் பாதித்தவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஏராளமானவர்கள் நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்தனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து தினமும் 1000 முதல் 1200 வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது மீண்டும் தினமும் 3 ஆயிரத்துக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 21 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் நேற்று ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் 3,500 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் வேகமெடுத்து உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குழந்தைகள், முதியவர்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் வெளியே வரும்போது மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu