ஈரோடு மாவட்டத்தில் 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை

ஈரோடு மாவட்டத்தில் 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 98 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகள் போட்டு வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் அதற்கேற்ப தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதலில் ஒரு வாரத்திற்கு 4000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.தற்போது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4000 பேர் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.நேற்று வரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் 98 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசியும் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஒருவர் முதல் தடவை கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அடுத்த 28வது நாளில் இரண்டாவது அதே கோவேக்சின் தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story