தி.மு.க சார்பில் அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு

தி.மு.க சார்பில் அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு
X
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாநகர் பகுதியில் அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்க நடவடிக்கை..

ஈரோடு மாநகர் பகுதியில் காந்திஜி ரோடு, அரசு தலைமை மருத்துவமனை வளாகம், சூளை, சூரம்பட்டி,கொல்லம்பாளையம், சின்ன மார்க்கெட் பகுதி உள்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மற்ற உணவகங்களை விட இங்கு விலை குறைவு என்பதால் எப்போதும் அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏழை தொழிலாளர்கள், வறுமையில் வாடும் முதியவர்கள் அம்மா உணவகங்களில் வயிறார சாப்பிட்டு பசியாறி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு பதிலாக பார்சலில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்தும், வாழ்வாதாரத்தை தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆறுதலாக அம்மா உணவகங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் 11 அம்மா உணவகங்களில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 14ஆம் தேதி ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஆகும் செலவை தெற்கு மாவட்ட தி.முக ஏற்றுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story