தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கு 'தடா' - போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

ஈரோடு சூரம்பட்டியில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய கோரி அப்பகுதி மக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட சூரம்பட்டி பாரதிபுரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் 10 நபர்களுக்கு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதி நபர்கள் வெளியே செல்லாக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநபர்கள் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் போன்ற வாகனங்கள் அந்த தெருவிற்கு உள்ளே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் வராததால், தாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகக்கூறி அப்பகுதி மக்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story