குடிநீருக்கு காத்திருக்கும் மக்களுக்கு கொரோனா ஆபத்து காத்திருக்கு: ஈரோடு மாநகராட்சி கவனிக்குமா?
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தனியார் பங்களிப்புடன் கூடிய விற்பனை மையங்களில், 20 லிட்டர் ஆர்.ஓ. குடிநீர் ரூ.7-க்கு விற்கப்பட்டு வருகிறது. வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், மாணிக்கம்பாளையம்,மணல்மேடு, சோலார், சூளை என 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த குடிநீர் மையம் செயல்பட்டு வருகிறது.
தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, இந்த குடிநீர் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குடிநீர் பெற்று வந்தனர்.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விற்பனை மையங்களில் தண்ணீர் பிடிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே தண்ணீர் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த குடிநீர் மைய விற்பனை நிலையங்கள் முன்பு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், காலி கேன்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பெற்று செல்கின்றனர். இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பெரும்பாலும் மக்கள் முகக்கவசம் அணிந்து இருந்தாலும் ஒரு சிலர் முகக்கவசத்தை கழுத்துக்கு கீழேயும் மூக்கு தெரியும்படி அணிந்துள்ளனர். மேலும் முதியவர்கள் அதிக அளவில் வந்து வரிசையில் நின்று செல்கின்றனர்.
இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பழையபடி காலை முதல் இரவு வரை குடிநீர் விற்பனை மையங்களில் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொற்று பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு, ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu