கொரோனா: 2 -வது நாளாக கலெக்டர் அதிரடி ஆய்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மேலும் பரவி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ .200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கதிரவன் ஈரோடு வ.உ.சி பூங்கா, காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள் மேட்டூர் ரோட்டில் உள்ள கடைகள், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு முககவசம் அணியாமல் வந்த 50 நபர்களுக்கு ரூ 200 அபராதம் விதித்தார். இதைப்போல் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத 5 கடைகளுக்கு தலா ரூ25 ஆயிரம் விதித்தார். மேலும் இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ரவுண்டானா, இடையன்காட்டுவலசு போன்ற பகுதிகளில் கலெக்டர் கதிரவன் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். இதில் முககவசம் அணியாமல் வந்த 10க்கும் மேற்பட்டோருக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு செல்போன் கடை, ஒரு ஹோட்டல் உள்பட 5 கடைகளுக்கு தலா 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மூன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 20- ஐ நெருங்கியுள்ளது. எனவே தொழிற்சாலை, நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், தொழிற்சாலை நிறுவனங்களில் சானிடைசர் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பொது முடக்கம் நிலைமை ஏற்படலாம் என் கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu