ஈரோடு மாநகரில் 2 பேருக்கு டெங்கு - நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஈரோடு மாநகரில் 2 பேருக்கு டெங்கு - நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
X
ஈரோடு மாநகரில், சிறுமி உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதால், நோய் தடுப்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மழைக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் பழைய போர்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில், 60 வார்டுகளில் உள்ள வீடுகளில் தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாநகர் வெட்டுகட்டுவலசில் சிறுமி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் அன்னை சத்யா நகரில் வெளியூரிலிருந்து வந்த பெண் ஒருவருக்கும் டெங்கு காய்ச்சலை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகர நல அலுவலர் முரளி சங்கர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், அப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். மாநகராட்சி சார்பில் இரண்டு இடங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். திறந்தவெளியில் தண்ணீர் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. தற்போது இருவருக்கு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் வசித்த இரண்டு பகுதியிலும் உள்ள 400 வீடுகள் சேர்ந்தவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் யாருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவுடன், அங்கு மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது என்றார்.

Tags

Next Story
ai marketing future