ஈரோட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு ஏன்?

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் அதிகரித்து வருவது, கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக இருந்து வந்த நிலையில், அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று, கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை, 28 ஆயிரமாக குறைந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் போன்றவற்றில், அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம் தொடர்ந்து 5-வது நாளாக தினசரி பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக, நேற்று புதிய உச்சமாக ஒரேநாளில், 1784 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 400 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 1,384 பேர் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 25 வயது இளம்பெண் உள்பட 22 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மாநகர் பகுதியை விட தற்போது கிராமப்புற பகுதியில் குடும்பம் குடும்பமாக மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கிராமப்புற பகுதியில் போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததுதான்.

இன்னமும் கிராமப்புறங்களில் மக்கள் ஒன்று கூடுகின்றனர், முகக்கவசம் அணியாமல் பேசி வருகின்றனர். இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகின்றனர். இறப்பு போன்ற நிகழ்ச்சியில் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பங்கேற்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கிராமப்புற பகுதியில் இயங்கும் நிறுவனங்களில் பல்வேறு இடங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து வேலை பார்த்து வருவதால் அதன் மூலமும் தொற்று வேகமாக பரவி வருகிறது. கிராமப்புற பகுதி மக்களுக்கு சளி காய்ச்சல் இருந்தால் அருகில் இருக்கும் மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் தற்காலிகமாக சளி, காய்ச்சல்கள் குறைந்துவிடுகிறது.

பின்னர் ஒரு வாரம் கழித்து அந்த நபர்களுக்கு கடுமையான சளி காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் போது தொற்று ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு விடுகிறது.இதேபோல் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டில் தனிமையில் இருக்காமல் வெளிய காய்கறி ,மளிகை பொருட்கள் வாங்கச் செல்வது நண்பர்களுடன் பேசுவது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். அந்த நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தொற்று பரவுகிறது. இதுபோன்ற காரணங்களால் கிராமப்புற பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கிராமப்புற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வெளிநபர்கள் உள்ளே வர அனுமதி மறுத்துள்ளது. இ-பதிவு பெற்ற வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

எனினும் மக்கள் வெளியே சுற்றுவது, விதிமுறைகளை மீறுவது தொடர்கதையாகவே உள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளை முறையாக பின்பற்றி ஒத்துழைத்தால் மட்டுமே, தொற்றில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுபட முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது