ஈரோடு: 2வது நாளாக 69 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு: 2வது நாளாக 69 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது
X

ஈரோட்டில், முகாம் ஒன்றில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இளைஞர்.

ஈரோட்டில், இன்று 2-வது நாளாக 69 மையங்களில் கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோட்டில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி, தற்போது தினசரி பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

முதலில் ஈரோடு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மையங்களில் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 580 பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட 46 ஆயிரத்து 670 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக சமீப காலங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 400 கோவிஷில்டு தடுப்பூசிகள் வந்ததால் நேற்று முதல் 42 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதிகாலை 4 மணி முதலே தடுப்பூசி மையங்களில் மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். முதல் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

ஈரோடு மாநகர் பகுதியில் 10 ஆரம்ப சுகாதார மையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த ஆரம்ப சுகாதார மையங்கள் அருகே உள்ள பள்ளிகளில் தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டு போடப்பட்டது. நேற்று முதல் நாளில் மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 900 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று 2-வது நாளாக 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி காலை 6 மணிக்கு தொடங்கியது. ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மையத்திற்கு அதிகாலை 2 மணிக்கே பொதுமக்கள் தடுப்பூசி போட திரண்டு வந்து விட்டனர். இதேபோல் மற்ற மையங்களிலும் அதிக அளவில் மக்கள் திரண்டு விட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் முதலில் வந்த 200 பேருக்கு மட்டுமே இன்று டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!