கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்
கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட கலெக்டர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்திற்கு நாள்தோறும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ப்ளையர்கள், துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள் வெளியீடு மற்றும் விநியோகம், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு பதிவு செய்தல் , ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் பேச்சு போட்டி ,நேரடி ஒளிபரப்பு நிகழ்வுகள் நடத்துதல், பேருந்து நிலையம், இரயில்வே நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தன்சுத்தம் மற்றும் கொரோனா தடுப்பூசி போன்ற விழிப்புணர்வு குறித்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகத்தினை அரங்கேற்றினர். அதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்த கானாபாடல் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில், கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம், தன் சுத்தம், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.பி.முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu