ஈரோட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தாக்கம்: 3வது அலை தொடக்கமா?
கொரோனா 2ம் அலையின் தாக்கத்தையொட்டி தமிழகத்தின் தினசரி பாதிப்பில் இரண்டாவது இடமாக ஈரோடு மாவட்டம் இருந்து வந்தது. மாவட்ட நி்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. கடந்த சுமார் 40 நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இதைப்போல் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களா கொரோனா தினசரி பாதிப்பு திடீரென உயர்ந்து வருகிறது. அதாவது, நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 122 ஆக இருந்தது. நேற்றுமுன்தினம் சுகாதார துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 129பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று 141 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், இவ்வாறாக மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று, 3ம் அலையின் தொடக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை குறைந்து வந்த தினசரி பாதிப்பு திடீரென உயர்ந்து வருவதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிக அளவில் வெளியே நடமாடி வருகின்றனர். குறிப்பாக பஸ்களில் 50 சதவீத பணிகள் மட்டுமே ஏற வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் தற்போது பஸ்களில் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் வீட்டை விட்டு வெளியே வரும் ஒரு சில மக்கள் முறையாக கவசம் அணிவது இல்லை. இதுபோன்ற செயல்களால் தான் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu